மகிந்த வெளியிடவுள்ள அறிக்கையின் உள்ளடக்கத்தை கூற முடியாது - அரசாங்கம் அறிவிப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அதன் உள்ளடக்கங்களை தற்போது கூற முடியாது எனவும் இணை அமைச்சரவை பேச்சாளர், வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளால் பல்வேறு வகையான கருத்துக்கள் உள்நோக்கத்துடன் வெளியிடப்படுவதாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தன்னால் சரியாகக் கூற முடியாது எனத் தெரிவித்த கொடஹேவா, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் பல விவாதங்கள் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் என்றார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுத்து எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருந்தால் பதவியை இராஜினாமா செய்து புதிய அமைச்சரவையை அமைக்கத் தயார் எனவும் பிரதமர் கூறியுள்ள போதிலும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நாலக கொடஹேவா மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது என கொடஹேவா தெரிவித்தார். பிரிவினைவாத குழுக்களுடன் சாதகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதா அல்லது யாருடன் இணைவது என்பது குறித்து இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அவதியுறும் வேளையில் தப்பிச் செல்வது ஏற்புடையதல்ல எனவும், அரசியலை புறந்தள்ளிவிட்டு நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கொடஹேவா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு புதிய அமைச்சரவையை அரச தலைவர் நியமித்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்துவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமித்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டால் மஹிந்த ராஜபக்ச பிரதமராவார் என பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மஹிந்த ராஜபக்சவை பிரதமராக பொதுஜன பெரமுனவே முன்னிறுத்தலாம் என பசில் ராஜபக்ச யோசனை தெரிவித்ததாக தெரிவித்தார். ஒருமித்த அரசு அமைக்கப்பட உள்ளது. பிரதமர் அவராகவோ அல்லது வேறு ஒருவராகவோ இருக்கலாம் என கொடஹேவா தெரிவித்துள்ளார்.
