அரசாங்கத்திற்குள் வலுக்கும் பதற்றம்! மூடிய அறைக்குள் அவசர சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) அறிவுறுத்தலின் பேரில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுடன் (Wimal Weerawansa) அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு, கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கடிகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச தலைவர் தலைமையில் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை விரைவில் நடத்துவதற்கும், அதன் பின்னர் கட்சித் தலைவர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடலை நடத்துவதற்கும் பிரதமர் இணங்கியுள்ளதாக அரச தரப்பை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.