மகிந்தானந்தவால் தாக்கப்பட்ட எம்பி: நாடாளுமன்றில் வெளியிடவுள்ள அறிக்கை
அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பின்னர், தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் அறிக்கை வெளியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட உறுப்பினர் குணதிலக ராஜபக்ச(Gunathilaka Rajapaksha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காவல்துறையினர் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டின் முக்கிய நிர்வாக மையமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு கமரா காட்சி
மேலும், அதிபர் செயலகத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை அவதானித்தால் இது தொடர்பான சம்பவத்தை தெளிவாக காணமுடியும் எனவும் அவர் குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான சம்பவத்தை பார்த்ததாக காவல்துறையினரிடம் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மகிந்தானந்த அளுத்கம (Mahindananda Aluthgamage) மற்றும் குணதிலக்க ராஜபக்சவிற்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |