தயாசிறி ஜயசேகரவுக்கு சவால் விடுத்துள்ள மைத்திரிபால சிறிசேன
தயாசிறி உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) செய்துள்ள ஒப்பந்தங்களை முடிந்தால் வெளியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு (Dayasiri Jayasekara) சவால் விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி தயாசிறி உள்ளிட்ட குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்வதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ள இணங்கியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தாம் மாத்திரமே பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல எனவும், அவரை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் தயாசிறி தெரிவித்திருந்தமை உண்மைக்கு புறம்பானது என மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாசவை முன்வைக்கும் பிரேரணை தமது கட்சியின் நிறைவேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரி குற்றச்சாட்டு
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்சவை நிறைவேற்று சபை நியமிப்பதற்கு முன்னரே, யாப்பு ரீதியாக அவருக்கு கட்சி உறுப்புரிமை வழங்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) ஏலம் விடுவதற்கு ஒரு குழுவும், தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் காட்டிக்கொடுக்க மற்றொரு குழுவும் செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |