மைத்திரி நீதிமன்றில் மனு தாக்கல்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட அரச தலைவர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, கடந்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைனக்கப்பட்டது.
இந்த அரச தலைவர் ஆணைக்குழு அறிக்கையில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் வழக்குத் தொடுப்பதற்கு அறிக்கையில் அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
குறித்த அறிக்கையில் சில நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தொடுக்குமாறு அரச தலைவர் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட்ட பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரி வரும் நிலையிலேயே, குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
