இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மியன்மாரில் (Myanmar) நேற்று (28) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் நிலநடுக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”மியன்மாரில் நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 12.50 மணியளவில் 7.7 ரிக்டர் என்ற அளவில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது.
மியன்மாரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தாய்லாந்திலும், தென் சீனாவிலும் வட கிழக்கு இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.
இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், உயிரிழப்புக்கள் ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பதிவான நிலநடுக்கங்கள்
இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது.
இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை.
ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல் 2004ம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு புவிநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
