உடன் நடைமுறையாகும் வகையில் இலங்கை தொடர்பில் மலேசியாவிலிருந்து வெளியான அறிவிப்பு
கொரோனா தாக்கம் காரணமாக இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை உடன் நடைமுறையாகும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மலேசியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
மலேசிய குடிவரவு பணிப்பாளர் நாயகம் கைருள் டைமி தாவூத் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றவர்கள் மலேசியாவுக்கு பயணிக்க முடியும்.
இந்த அனுமதியின் கீழ் மலேசியாவுக்கு பயணிப்பவர்கள், தடுப்பூசிகளைப் பூரணமாக பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் மலேசியாவைச் சென்றடைந்ததும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், எந்தப் புதிய திரிபுகளும் பரவாமல் தடுப்பதற்காக, மலேசிய சுகாதார அமைச்சினால், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
எவ்வாறிருப்பினும், அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மலேசியாவில் தொடரந்தும் நடைமுறையில் இருப்பதாக மலேசிய குடிவரவு பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.