இந்தியாவிடம் அடிபணிந்தார் மாலைதீவு அதிபர்
மாலைதீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என மாலைதீவு அதிபர் முகமது முய்சு வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவுக்கு 400.9 மில்லியன் டொலர்களை கடனாக மாலைதீவு திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த நிலையில் தற்போது, இந்தியா மாலைதீவுக்கு நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் என தடம் மாறிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
மாலைதீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்ற காலம் முதல், அவர் சீன ஆதரவு நிலைப்பாட்டை காண்பித்ததுடன் இந்தியா மீது எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தார்.
இந்திய ராணுவம்
அதன்பொருட்டு, மாலைதீவிலுள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என கெடு விதித்தார், பின்னர் அந்நாட்டு அமைச்சர்கள், பிரதமர் மோடியை விமர்சித்ததை கண்டுகொள்ளாமல் அதற்கு ஆதரவு போக்கை காண்பித்த நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் விரிசலை கண்டது.
இந்நிலையில் முகமது முய்சுவின் வேண்டுகோள்ப்படி, இந்திய ராணுவத்தின் முதல் குழுவினர் அண்மையில் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர், மிகுதியுள்ள வீரர்களும் எதிர்வரும் மே மாதம் 10ம் திகதிக்குள் வெளியேறுவார்கள் என மாலைதீவு வெளியுறவு அமைச்சு கூறியிருந்தது.
இந்நிலையில்,அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு மாலைதீவு அதிபர் முகமது முய்சு அண்மையில் அளித்த நேர்காணலின் போது, "மாலைதீவுக்கு மிகப்பெரிய உதவி வழங்குவதில் இந்தியா பெரிய பங்கு வகித்தது என்றும் பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களை செயற்படுத்தியது மாத்திரமல்லாமல் எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா தொடர்ந்தும் இருக்கும், அதில் எந்த பிரச்னையும் இல்லை." எனக் கூறியுள்ளார்.
இந்திய அரசு
மேலும், இந்தியாவிடம் மாலைதீவு கடன் பெற்றுள்ள நிலையில் அந்தக் கடன் சுமையை மாலைதீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாத நிலை காணப்படுவதால், கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலைதீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்.
இதை இந்திய அரசு செய்யும் என நம்புகிறேன், மாலைதீவின் பொருளதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் கூறியது தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்தியா மீது காழ்ப்புணர்ச்சியை உமிழ்ந்து ஒரு மாதம் கூட கடக்காத நிலையில் இந்தியா மீது அதிபர் முகமது முய்சு நட்பு பாராட்டுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |