சாதாரண தர பரீட்சையில் முறைகேடு: பரீட்சைகள் ஆணையாளர் சிஐடியில் முறைப்பாடு
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் (G.C.E. O/L Examination) இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது.
குறித்த முறைகேடு தொடர்பில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) உள்ள இரண்டு பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கையடக்கத் தொலைபேசி பயன்பாடு
பரீட்சை எழுதியவர்கள் நேற்று (09) வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |