சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஆபத்தான நபர் கைது!
சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் அடங்கிய பல குரல் பதிவுகளுடன், பொரளை வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த பாதாள உலக கும்பல் உறுப்பினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் சட்டவிரோதப் பொருட்களை எறிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையிலிருக்கும் "போல சுரேஷ்" என்பவரது வீட்டில், சஹாஸ்புர காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சந்தேகநபர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இந்தச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், 2025 ஜூலை 7 அன்று கல்கிஸ்ஸ காவல் பிரிவிற்குட்பட்ட வட்டலப்பல பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இவரே என்பது தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த 6 ஆம் திகதி மெகசின் சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |