நீண்ட நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது!
நீண்ட நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர் திருநெல்வேலி சந்தைக்கு வருவோரை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
குறித்த நபர்கள் இராச பாதை வீதியில் உள்ள தோட்ட வெளியில் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளில் நின்று காலை வேளையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க வருவோர் மற்றும் மரக்கறி கொண்டு செல்வோரை இலக்கு வைத்து, பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து வந்துள்ளனர்.
வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொறுப்பதிகாரி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் மற்றைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
