வீதியால் சென்ற நபர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி: கொழும்பில் சம்பவம்
கொழும்பில் (Colombo) வீதியில் பயணித்த நபர் ஒருவரை காரால் மோதியதுடன் குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று (05.11.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரை கொடூரமாக தாக்கி காரில் மோதி கொலை செய்ய முயற்சித்த காரின் உரிமையாளர் 24 வயதுடைய வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதனா வைத்தியசாலை
இந்த சம்பவத்தில் பொரலஸ்கமுவ நீலம்மஹர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே பலத்த காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொரலஸ்கமுவ கால்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுவாவல நீலம்மஹர பிரதேசத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காரின் இடது பக்க கண்ணாடி அவரது கையில் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்போது, சந்தேக நபரான தொழிலதிபர் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி பாதசாரியை தாக்கியதும், இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
கொலை முயற்சி
தாக்கப்பட்ட பாதசாரி அவ்விடத்தை விட்டுச் செல்லும் போது காரை இயக்கி அவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த நபரின் மனைவி செய்த முறைப்பாட்டிற்கமைய, விபத்து இடம்பெற்ற இடத்தை ஆராய்ந்ததுடன், அங்கிருந்த சிசிடிவி விசாரணையின் போது வர்த்தகர் பாதசாரியை தாக்கியமை தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நபரொருவரைப் படுகாயப்படுத்தியமை, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை, விபத்தைத் தவிர்க்க தவறியமை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபரான வர்த்தகர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |