விசாரணை அதிகாரிகளை திணற வைக்கும் சம்பத் மனம்பேரி
போதைப்பொருள் ரசாயன கொள்கலன்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி காவல்துறையினரைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
சந்தேக நபரான மனம்பேரி, சமீபத்தில் ஐஸ் என்ற போதைப் பொருளை தயாரிக்கத் தேவையான ரசாயனங்களை கொண்டு சென்ற வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட பின்னர், தலைமறைவாக இருந்தார்.
போலி வாக்குமூலம்
பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் நீதிமன்றத்தால் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சந்தேக நபர் காவல்துறையினரைத் தவறாக வழிநடத்த பல்வேறு போலி வாக்குமூலங்களை வெளியிட்டு வருவதாகக் தெரியவருகிறது.
காவல்துறையினரிடமிருந்து மறைந்திருந்த காலகட்டத்தில் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை விசாரிக்க சந்தேக நபரின் தொலைப்பேசி குறித்து அதிகாரிகள் கேட்டபோது, அவர் அடிக்கடி பேருந்து நிறுத்துமிடங்களில் தூங்கியதாகவும், அவரது தொலைபேசி அங்கு காணாமல் போனதாகவும் கூறியுள்ளார்.
ரகசிய தகவல்கள்
அதன்படி, சந்தேக நபரின் வாக்குமூலங்களின்படி, அவர் இரவில் தூங்கியதாகக் கூறப்படும் புறக்கோட்டை பேருந்து நிறுத்துமிடத்தில் உள்ள பாதுகாப்பு கமரா அமைப்பையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனக்குத் தொடர்பு இருந்த பலரை பாதுகாக்கும் நோக்கில் தனது தொலைப்பேசி காணாமல் போனதாக மனம்பேரி கூறியதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், இதுவரை அவர் வெளிப்படுத்திய சிலரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்த பல ரகசிய தகவல்கள் எதிர்காலத்தில் வெளியாகக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
