அரசியல் பழிவாங்கல் விசாரணைகளில் சூழ்ச்சி! அம்பலப்படுத்தினார் லக்ஸ்மன் கிரியெல்ல
இலங்கையில் அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்களை திரட்டுவதை விடுத்து, நீதிமன்ற அதிகாரத்தை கைப்பற்ற முனைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு தகவல்களை திரட்டுவதை விடுத்து நீதிமன்ற அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள், மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகள், ஏனைய நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் இந்த ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இது நீதிமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சி. நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றியமைக்க இவ்வாறான ஆணைக்குழுக்களுக்கு முடியாது.
இந்த ஆணைக்குழு நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் கொலைக் குற்றத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட மாற்றத்தை ஏற்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. நெருக்கமானவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு பரிந்துரைத்துள்ளதோடு, சந்தேக நபர்களை வழக்கு தொடுநர்களாக மாற்றியுள்ளது. இது நீதிமன்ற அதிகாரத்தை ஆணைக்குழு கைப்பற்றும் முயற்சியாகும்.
இதுத் தொடர்பில் ஆராயுமாறு பிரதம நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
சட்டமா அதிபருக்கு பரிந்துரை வழங்குவதற்கு இந்த ஆணைக்குழுவால் முடியாது. காரணங்களை கண்டறிய முடியும் அவ்வளவு தான்.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பூரணமடையாதது. அரசாங்கம் வேண்டுமென்றே அறிக்கைகளை தாமதப்படுத்துகின்றது என்றார்.