மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : இருவர் பலி
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்த்தி பிரிவினரிடையே தொடரும் மோதல் நிலைக்கு மத்தியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரு தரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் குறித்த பகுதியில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது.
இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல நாட்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.
வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அந்த மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டதை தொடர்ந்து, மணிப்பூரில் நிலைமை சீராக ஆரம்பித்தது.
வன்முறை சம்பவங்கள்
எனினும், இன்னும் குறித்த பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு
இந்த வரிசையில், இன்றும் மணிப்பூரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இன்றைய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் காயமுற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கி சூட்டில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும், கிராமத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |