முல்லைத்தீவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி
முல்லைத்தீவில் (Mullaitivu) காவல்துறை அதிகாரி ஒருவர் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (07) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாங்குளம் காவல் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இராணுவ படை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 592 வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஏ -9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று (07) காலை குறித்த காவல்துறை அதிகாரி ஐஸ் போதை பொருளுடன் இருந்த வேளை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த காவல்துறை அதிகாரி தனது உடமையில் 92 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
இந்தநிலையில், மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல்துறை பொறுப்பதிகாரியாக இருந்த குறித்த நபர் மீது பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல் மற்றும் இலஞ்சம் பெறுதல் போன்ற பல குற்றாச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த அதிகாரி வெலிஓயா காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த விடயங்களை ஆதாரப்படுத்தும் முகமாக தற்போது குறித்த நபர் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே குறித்த காவல்துறை அதிகாரி மீது உயரதிகாரிகள் உடனடியாக உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
