டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்: விசாரணைகளை தீவிரப்படுத்திய இலங்கை
டுபாயில்(Dubai) தலைமறைவாகியிருந்த போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான மன்ன ரமேஷ் எனப்படும் முதியன்சலாகே ரமேஷ் பிரியஜனக இன்று அதிகாலை இலங்கைக்கு (Sri Lanka) அழைத்துவரப்பட்டுள்ளார்.
சர்வதேச காவல்துறையினரால் பிறபிக்கப்பட்ட சிவப்பு பிடியாணைக்கமைய அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது குறித்த நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
சார்ஜாவில் இருந்து டுபாய் நோக்கி மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான மன்ன ரமேஷ் எனப்படும் முதியன்சலாகே ரமேஷ் பிரியஜனக கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் டுபாய்க்கு பயணம் செய்திருந்தது.
பல குற்றச்சாட்டுக்கள்
மன்ன ரமேஷ் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக கப்பம் பெறுதல், கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |