பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் இடம்பெறும் முறையற்ற செயற்பாடு- நீதிமன்றின் உத்தரவு!
மன்னார் - பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவித்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கௌதாரிமுனையில் இடம்பெற்று வந்த மணல் அகழ்வு பிரச்சினையை நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக நிறுத்தியதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த வழக்கிலும் முன்னியாகியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுக்கு எதிராக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு தொடுனர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, கே.சயந்தன் மற்றும் எஸ்.டினேசன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது எதிர்வரும் 29 ஆம் திகதி குறித்த பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற நிறுவனத்தினரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.