மன்னாரில் மேலும் 9 கொவிட் தொற்றாளர்கள் கண்டறிவு
மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
கொரோனா நிலவரம் குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று(6) கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் நேற்று சனிக்கிழமை (5) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்களும், இந்த வருடம் 505 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் தற்போது வரை 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி நானாட்டான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 383 பிசிஆர் பரிசோதனைகளின் போது மன்னார், அரிப்பு, சாந்திபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 132 பிசிஆர் பரிசோதனைகளின் போது 2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் 787 பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.