மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பணி புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக 24 மணி நேர போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக குறித்த போராட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாதியர் சேவை
குறித்த அநீதியான முடிவு தாதியர் சேவையின் கௌரவத்திற்கும் மற்றும் தனித்துவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தாதிய உத்தியோகத்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகணத்தில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (12) காலை ஏழு மணி தொடக்கம் நாளை (13) காலை ஏழு மணி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நோயளர்கள்
இதனடிப்படையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைத்திய சேவைகள் இடம்பெற்ற போதும் தாதிய உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |