10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை: பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்!
மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று(16) சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சிறுமி நேற்று முன்தினம் (15) மாலை காணாமற்போயுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சிறுமியின் சடலம்
இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்று (16) காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் - பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் உயிரிழந்த சிறுமி மூன்றாவது பிள்ளையாவார்.
சந்தேக நபர் கைது
சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை - குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சில சிசிரிவி காட்சிகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டதுடன், நேற்று காலை 6.15 அளவிலேயே சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
சட்ட வைத்திய அதிகாரியும் மன்னார் மாவட்ட பதில் நீதவானும் சிறுமியின் சடலத்தை பார்வையிட்டு செல்லும் போது, சிறுமிக்கு நீதி கோரி பிரதேச மக்களால் கவனயீர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை 10.30 மணியளவில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன் குறித்த சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சிறுமியின் உடல் தற்போது அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |