பணம் படைத்தவர்களால் வடக்கில் அடாத்தாக அபகரிக்கப்படும் காணிகள்!
முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் Y.F.C அமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பூனாட்சிகுளம், பண்டாரவெளி போன்ற பகுதிகளில் உள்ள அரச காணிகள் தனியார் சிலரால் அடாத்தாக பிடிக்கப்படுவதகவும் இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், இளைஞர்களுக்கும் காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விரைவில் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இன்றைய தினம் காலை 10 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காணிகளை விடுதலை செய்து காணியில்லாத ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும், காணி அத்துமீறலை உடனே நிறுத்து, அடாவடியாக காணி பிடித்தலை உடனடியாக நிறுத்தவும், அடாத்தாக காணி பிடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், எமது பகுதியில் பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே காணிகளை அபகரிக்கின்றனர் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தின் பின்னர் கோரிக்கை அடங்கிய மகஜரை முசலி பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.