கலவரமாக மாறிய மன்னார் பிரதேசசபை அமர்வு- ஒலிவாங்கியை தூக்கி வீசி தகாத வார்த்தைகளால் பேசிய பெண் உறுப்பினர்!
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வின் போது கலவரம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வின் போது ஏற்பட்ட கலவரத்தில் இரு உறுப்பினர்கள் காயமடைந்துள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு தொடர்பான கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதன் போது மன்னார் பிரதேச சபைத் தவிசாளராக எம்.எச்.எம் முஜாஹீரா அல்லது உப தவிசாளராக இருந்த முஹமட் இஸ்ஸதீனா தெரிவுசெய்யப்படுவது என்ற பாரிய இழுபறி நிலைமை சபை உறுப்பினர்களுக்கு இடையில் காணப்பட்டது.
இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கலவரமாக மாறிய நிலையில் பிரதேச சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது மன்னார் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா , இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன் மேசையில் இருந்த ஒலிவாங்கியை தூக்கி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதன் மீது தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதேவேளை ஒலிவாங்கியை பறித்து தாக்க முயற்சி செய்த போது சபையில் இருந்தவர்கள் பிடித்து சமாதானப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் தற்போதைய தலைவர் சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் 42ஆம் மற்றும் 43 ஆம் சபை அமர்வுகளில் சபையின் தவிசாளர் யார் என்ற சந்தேகம் எழுந்ததால் அமர்வுகளில் இருந்து எதிர் தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வின் போது இன்றைய தினம் ஏற்பட்ட தர்க்க நிலையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா மற்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதன் ஆகியோர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.