முஸ்லிம் மையவாடி பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம்-விசனம் வெளியிட்டுள்ள பொதுமக்கள்!
மன்னார் சிலாபத்துறை புது வெளி பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடியில் அமைக்கப்படவுள்ள கரப்பந்தாட்ட மைதான பணிகளை நிறுத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். மன்னார் முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் பாலர் பாடசாலை, பள்ளிவாசல், மையவாடி போன்றவை அமைந்துள்ளன.
எனினும் மையவாடிக்கு என ஒதுக்கப்பட்ட காணிக்குள் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், உரிய அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தை குறித்த மையவாடி பகுதியில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனவே குறித்த விளையாட்டு மைதானம் மையவாடி பகுதியில் அமைக்கப்படுவதை நிறுத்தி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இது குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் ஐ தொடர்பு கொண்டு வினவிய போது இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேசச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறினார். மையவாடியில் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.







