மன்னார் காற்றாலை விவகாரம்: அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
மன்னாரில் காற்றாலை விடையம் நீண்டு கொண்டு செல்கிற நிலையில் மன்னார் மாவட்டம் போராட்டத்தினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இப் போராட்டத்தினால் அரசு பாரிய இடர்களை சந்திக்கின்ற நிலையில் மன்னார் மக்கள் தமது போராட்டம் நியாயமானது, அதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் போராடி வருகின்றனர்.
எனவே மக்களின் அரசாங்கம் என்ற வகையில் அரசு விட்டுக் கொடுப்பிற்கு வரவேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.*அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் தற்போது காற்றாலை மின் உற்பத்தி செயல் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைக்கின்றமை முதன்மை பெறுகிறது. குறித்த விடயம் மன்னார் மாவட்டம் மட்டும் இன்றி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் ஒரு பேசும் பொருளாக காணப்படுகின்றது.
எந்த அளவிற்கு பாதிப்பு
காற்றாலை திட்டம் மன்னார் தீவு பகுதியில் உள்ள மக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு என்பதை இந்த இரண்டு மாத காலங்களாக ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்து வருகின்ற மக்களினால் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
குறித்த காற்றாலை திட்டத்திற்கு எதிராக மன்னார் மாவட்டம் மற்றும் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலும் மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டங்களின் ஊடாக மன்னார் தீவு பகுதிக்குள் மக்களை பாதிக்கும் குறித்த காற்றாலை மின் உற்பத்தி திட்டம் வேண்டாம் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாரிய சர்ச்சைக்குள் சிக்கியுள்ள மன்னார் மாவட்டம்
ஏற்கனவே மன்னார் தீவில் அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலைகள்,அதற்கு அப்பால் ஜனாதிபதி அண்மையில் அனுமதித்த 14 காற்றாலைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில்,குறித்த நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்டம் பாரிய சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.
இந்த அரசாங்கம் மக்களுக்கானது.மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்துள்ளது.
அரசு விட்டுக் கொடுப்பிற்கு வரவேண்டும்
தற்போது மக்களின் கருத்து ஒரு விதத்திலும், ஜனாதிபதியினுடைய கருத்தும்,அரசினுடைய கருத்தும் இன்னொரு விதத்திலும் அமைந்துள்ளமையை நாங்கள் தற்போது பார்த்து வருகிறோம்.
எனவே மக்களின் அரசாங்கம் என்ற வகையில் அரசு விட்டுக் கொடுப்பிற்கு வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
