வியாழேந்திரன் வீட்டின் முன்னால் இடம்பெற்ற படுகொலை- கண்ணீருடன் அலையும் பெற்றோர்!
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathsivam Viyalenthiran) வீட்டுக்கு முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன், போது பாலசுந்தரத்தின் தாய் தந்தையர், எனது மகனை கொலை செய்ததும் இல்லாமல் எம்மை நாய் போன்று அலைய வைக்கின்றனர் என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு 8 மணியளவில் நாங்கள் வந்திருந்த போதும் எங்களுடைய வழக்கு தாமதமாகவே அழைக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்ப்பது என் மகனுடைய கொலைக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
நீதிபதி 15ஆம் திகதி விளக்கம் பெறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் எங்களை மாறி மாறி ஒவ்வொரு இடம் அலைய வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். உடல் கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றதா என இன்று நீதிபதி எங்களிடம் கேட்டபோது, நாங்கள் மட்டக்களப்பு காவல்துறையிடம் சென்றபோது ஏறாவூர் காவல்துறையிடம் கேட்குமாறு கூறுகின்றார்கள்.
மட்டக்களப்பு காவல்துறை இவ்வாறு எங்களை அங்கேயும் இங்கேயும் அலைய வைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். திட்டமிட்டு எனது மகனை சுட்டு கொலை செய்துவிட்டு இன்று எங்களை நாய் போன்று அலைய வைக்கின்றார்கள். எனது மகன் பிழை செய்திருந்தால் அவர்களது சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோக்களை காட்டலாம் தானே.
எங்களது மகன் பிழை செய்திருந்தால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ள தயாராக இருக்கின்றோம். சும்மா போன எனது மகனை பிடித்து வைத்து கொலை செய்துவிட்டு இப்படியே அலைய விடுகின்றனர்.
இன்று 5 மாதங்கள் கடந்து விட்டது நாங்கள் நீதிபதி நல்லதொரு முடிவை தருவார் என எதிர்பார்க்கின்றோம் என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கின் சந்தேக நபரை 14 நாட்கள் மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டதுடன் எதிர்வரும் 15ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுட்ளார்.
