முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து பேச தயங்கும் அநுர அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிகமாக பேசும் அநுர அரசு இறுதிப் போரில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் ஆதாரங்கள் வெளிவந்துள்ள போதும் அவற்றை பேச மறுக்கின்றது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugathas) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த கால ஆட்சியாளர்கள் கொலைகளையும் சூத்திரதாரிகளையும் பாதுகாத்தனர் என்பது உலகறிந்த உண்மை.
ஆனால் அத்தனை கொலைகள் மற்றும் ஊழல்களையும் கோப்புகளாக அடுக்கி வைத்து ஆட்சிக்கு வந்தால் உடன் நடவடிக்கை எடுப்போம் என கூறி ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் கடந்து செல்கின்ற போது தொடர்ந்தும் கொலைகள் தொடர்பில் பேசுவதை விட முடிந்தால் செயலில் காட்டுங்கள் அதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் அநுர அரசு அதிகமாக பேசுகின்றது. இறுதிப் போரில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன அவற்றை ஏன் நீங்கள் பேச மறுக்கின்றீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைக்கூலிகளை விட பிரதான சூத்திரதாரிகளை உங்களால் ஏன் இதுவரை கைது செய்ய முடியவில்லை?

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த நூற்றுக்கணக்கான மக்களையும் போராளிகளையும் சுட்டுப்படுகொலை செய்ய ஓடர் போட்டவர் வெளிப்படையாக கடந்த காலத்தில் சொன்னதாக ஊடகங்களில் அதன் ஆதாரம் பதிவாகியது. முடிந்தால் உடன் கைது செய்ய முடியுமா அமைச்சர் பிமல் (Bimal Rathnayake) அவர்களே?
வெளியான ஆதாரங்கள்
இறுதிப் போரில் சரணடைந்த பாலகன் பாலச்சந்திரன் இராணுவ காவல் அரண் ஒன்றில் பிஸ்கட் சாப்பிடும் காட்சியை தொடர்ந்து தப்பியோடிய கைதியை சுடுவது போன்று ஐந்து ரவைகள் நெஞ்சில் பாய்ந்தபடி படுகொலை செய்யப்பட்ட காட்சியை கொண்ட ஆதாரம் வெளியாகியதை நீங்களும் பார்த்திருக்கலாம் உலகமே பார்த்து வெதும்பியது பாலச்சந்திரன் கொலைக்கான சூத்திரதாரிகளை உடன் நிறுத்த முடியுமா?

சகோதரி ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்படும் ஆதாரம் அடங்கிய காட்சி மனித சமுதாயமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு பாரிய மன உழைச்சலை பார்த்தவர்களுக்கு கொடுத்து நான் இல்லை நான் இல்லை என கெஞ்சும் இசைப்பிரியாவின் குரல் கேட்கும் போது உங்கள் சகோதரிகளுக்கு அப்படி நிகழ்ந்தால் எப்படி உங்கள் நிலை இருக்கும் என்பதை சிந்தியுங்கள் வீடியோ ஆதாரத்தில் வெளிப்படையாக குற்றவாளிகள் தெரிகின்றனர்.
இன்னும் பல நூறு ஆதாரங்கள் இருக்கின்றது முடிந்தால் மேற்கூறிய படுகொலைகளுக்கான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்