தொடருந்து நிலையத்தில் பாரிய தீ விபத்து : ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருச்சூர் தொடருந்து நிலையத்தில் பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்து நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தில் இன்று (04) காலை ஏற்பட்ட இந்தத் தீப்பரவல் காரணமாக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமளவான மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தரிப்பிடத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஆரம்பத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஏற்பட்ட தீ, வேகமாகப் பரவி அருகிலிருந்த மரத்தையும் பற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தீயணைப்புப் முயற்சி
இதன் காரணமாக, இரண்டாவது நுழைவாயிலில் அமைந்திருந்த பயணச்சீட்டு விநியோகக் கவுண்டர் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து இயந்திரம் ஒன்றிலும் தீப்பற்றியதாகவும், பின்னர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அது அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தீப்பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |