மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு (Batticaloa) - நெடுஞ்சேனை ஆற்றங்கரை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று வவுணதீவு காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, இன்று (09.06.2024) காலை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட புலனாய்வு பிரிவினருக்கும் மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காவல் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை நெடுஞ்சேனை ஆற்றுங்கரை பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள்
இதன் போது, அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 5 பரல் கோடா மற்றும் காடி போன்ற பதார்த்தங்களுடன், 150 போத்தல் கசிப்பு மற்றும் உற்பத்திக்கான உபகரணங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
மேலும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத கசிப்பு எனப்படும் வடிசாராயம் உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |