பிரித்தானியாவில் ஈழத்தமிழருக்கு கிடைத்த உயரிய விருது
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பிரின் பிரதாபன் (Brin Pirathapan), பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின் 20ஆவது தொடர் முடிவில் வெற்றிபெற்று, “மாஸ்டர்செஃப் சம்பியன் 2024“ (MasterChef Champion 2024) என்ற மதிப்புமிக்க பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த போட்டியின் நடுவர்களான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோரால் மாஸ்டர்செஃப் கிண்ணம் பிரினுக்கு வழங்கப்பட்டது.
இதன்படி, மாஸ்டர்செஃப் வரலாற்றின் ஒரு அங்கமாக 29 வயதான பிரின், இரண்டு தசாப்தகால சிறந்த சம்பியன்களுடன் இணைந்துள்ளார்.
57 சமையல் போட்டியாளர்கள்
எட்டு வாரங்கள் கடினமான சவால்களுக்குப் பின் 57 சமையல் போட்டியாளர்களை கடந்து, பிரின் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் குறிப்பிட்டுள்ளார்.
அற்புதமான, காரமான சமையல் பின்னணியை தமது பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தமிழ் பாரம்பரியம்
தமது சமையல் பகுதிகள் உண்மையிலேயே இலங்கையின் தமிழ் பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று பிரின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த போட்டியின் நடுவரான ஜோன் ”பிரின் ஒரு அசாதாரண சமையல்காரர் மற்றும் ஒரு அற்புதமான திறமையுடையவர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மற்றுமொரு நடுவர் ”பிரினுருக்கு நுட்பம் உள்ளது, படைப்பாற்றல் உள்ளது. என் அனுபவத்தில், பிரின் தனித்துவமானவர். நான் இதுவரை கண்டிராத புத்திசாலித்தனமான திறமைகளில் ஒன்று இவரிடம் உள்ளது“ என பாராட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |