செவ்வந்தியுடனான தொடர்பில் 'மத்துகம ஷான்' வெளிவரும் திடுக்கிடும் தகல்கள்
தென்னிலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான 'மத்துகம ஷான்' தொடர்பில் இஷாரா செவ்வந்தியின் கைதின் பின்னர் அதிகளவில் சமூகத்தில் பேசப்பட்டது.
அத்தோடு, அண்மையில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலிலும் இந்த 'மத்துகம ஷான்' என்பவரின் பெயர் பேசப்பட்டு வருகிறது.
தற்போது துபாயில் வசித்து வரும் “மத்துகம ஷான்” என்பவருக்கு சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
யார் இந்த 'மத்துகம ஷான்'
43 வயதான 'மத்துகம ஷான்' , மத்துகம பகுதியில் பாதாள குழு செயற்பாடுகளில் பெயர் பெற்ற ஒருவர். இவர் அரசியல் பலத்தால் செய்த பல குற்றச் செயல்களால் அதிகளவில் பேசப்பட்டார்.

வட்டிக்கு பணம் கொடுத்தல் மற்றும் இலஞ்சம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்.
ஷான், சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிக்கு பெரும் விருப்பம் கொண்டிருந்ததுடன் களுத்துறை மாவட்டத்திற்கு பாதாள குழுச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான்.
கௌரவமான குடும்பம்
வீட்டில் ஒரே பிள்ளையான அவர் மத்துகமவில் பெயர் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவராவார். மத்துகமவைச் சேர்ந்த மஞ்சு என்பவர் ஷானின் காதலியுடன் தொடர்பு வைத்திருந்ததாக இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டது.

அதன் பின்னர் மஞ்சு சுட்டுக் கொல்லப்பட்டார். மஞ்சுவை கொலை செய்தவர் யார் என்று தெரியாவிட்டாலும் ஷானின் பெயரே அடிப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மஞ்சுவின் படுகொலைக்கு சந்தேகத்தின் பேரில் ஷானும் அவரின் நண்பர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஷான் சிறையில் இருக்கும் போது அவரின் உறவினரான புத்திக என்பவர் ஷானின் இடத்தை பிடிப்பதற்கு முயற்சித்த போது ஷான் சிறையில் இருந்தவாறு தீட்டிய திட்டத்தில் புத்திக சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசியல் தொடர்புகள்
ஷான் சிறையில் இருந்து விடுதலையாகிய போது 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஷான் அவரின் நண்பர்களுடன் மத்துகம பகுதியின் பிரபல அரசியல்வாதியுடன் சேர்ந்து தேர்தல் கடமைகளில் ஈடுபட்டார்.

அந்த அரசியல்வாதி தேர்தலில் வெற்றிப் பெற்று அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டு பின்னர்,அவரின் அமைச்சிலுள்ள ஒரு நிறுவனத்தில் ஷானுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அதில் இருந்த ஷானின் எல்ஆர்சி காணியில் 20 ஏக்கரை பெற்றுக் கொண்டு தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஷான் மற்றும் அவர்களின் நண்பர்கள் அரசியல் பலத்தால் பாதாள உலகின் பெரும் புள்ளிகளாக மாறினர்.
அத்தோடு அரசியல் செயற்பாடுகளான சுவரொட்டி ஒட்டுதல் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கல் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு கிடைத்த அரசியல் பலத்தால் வட்டிக்கு பணம் கொடுத்தல் மற்றும் வியாபாரிகளிடம் இலஞ்சம் வாங்குதல் ஆகியவற்றை செய்தனர்.
ஷானும் அவர்களின் நண்பர்கள் இருவரும் தனித்தனியாக தங்களின் பலத்தை காட்ட முயற்சித்த சமயத்தில் மத்துகம நகரம் பெரும் குழப்பத்திற்குள்ளாகியது.
ஷானுக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்திற்கான மூன்று பேருந்துகளும் இருந்துள்ளன.
தலைமறைவான ஷான்
அரசியல் மாற்றத்தின் பின்னர் அவர்களின் பலம் இழக்கப்பட்டது. அரசியல் பலத்தால் மூடி மறைக்கப்பட்ட அவர்களின் வழக்குகள் மீள தூசு தட்டி மேலெழுப்பப்படுவதை உணந்தார்கள்.

ஷான் கொழும்புக்கு செல்ல தீர்மானிக்கிறார். அதன்பின்னர் அவரை காணவில்லை என ஷானின் மனைவி காவல்துறையிலும் முறைப்பாடும் செய்கிறார். அதன் பின்னர் அவர் தொடர்பான எந்த தகலும் இருக்கவில்லை.
இவ்வாறான பின்னணியிலேயே பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதியின் பின்னரே ஷானின் பெயர் வெளிவந்துள்ளது.
கனேமுல்ல சன்ஜீவ கொலையில் ஷானுக்கும் தொடர்பிருப்பதாகவே தற்போது வரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மத்துகம ஷான் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்