மட்டக்குளியில் கோர விபத்து : காரின் சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சாரதி கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
நேற்று (16) இரவு மட்டக்குளி பகுதியில் வேகமாக பயணித்த காரொன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |