வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர் வார நிகழ்வுகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (24.11.2025) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை முன்றலில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூன்று மாவீரர்களின் தாய் ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.



வவுனியா தமிழரசு கட்சியின் அலுவலகம்
இந்நிலையில் போராளிகள் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் மாவீரர் நினைவேந்தர் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
வவுனியா தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் போராளிகள் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மங்கள வாத்தியங்களோடு அழைத்துவரப்பட்டு அதன் பின்னர் ஈகைச் சுடரினை நான்கு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்தார்.
இதனை அடுத்து நினைவுக் கல்லறைக்கு நான்கு மாவீரர்களின் மற்றுமொரு தாய் மலர் மாலை சூடி அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் அங்கிருந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெற்றோர் மற்றும் உரித்துடையோரால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டதோடு கலந்து கொண்டவர்களால் அஞ்சலி தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் இடம்பெற்று இருந்தது.
செய்தி - கபில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



