உடைந்த மாவிலாறு அணை: பாதிக்கப்பட்ட மக்கள்: தொடரும் மீட்பு பணி
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனினும் இன்று (02.12.2025) செவ்வாய்கிழமை வெள்ளம் சற்று குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும் வீடுகளில் வெள்ளநீர் காணப்படுகிறது.
பாலத்தோப்பூர் - தோப்பூர் பிரதான வீதியில் வெள்ளநீர் ஊடறுத்துச் சென்றமையால் நேற்று (01) முழுமையாக போக்குவரத்து தடைபட்டிருந்தது.
இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்
எனினும் இன்று வெள்ளம் சற்று குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் ஓரளவு பயணிக்க கூடியதாக உள்ளதையும் காணமுடிந்து.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூதூர், கங்குவேலி, பள்ளிக்குடியிருப்பு, பாலத்தோப்பூர், கிளிவெட்டி,பச்சநூர், கூர்க்கண்டம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் 3311குடும்பங்களைச் சேர்ந்த 9726 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 29 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் மூசூர் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான விசேட ஒருங்கிணைந்த குழுக் கூட்டம் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்ணசேகர தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், அமைச்சர் சுணில் ஹந்துன்னெதி, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, நாடாளுமண்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பலாரச அதிகாரிகள், முப்படை தளபதிகள் பங்கேற்றிருந்தனர்.
குறித்த கூட்டத்தின் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களது தற்போதைய நிலமை தொடர்பிலும், அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.


செய்தி - தொம்சன்
பாதிப்பு விபரம்
மேலும், சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22883 குடும்பங்களை சேர்ந்த 74449 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _ 2025.12.02இன்று (02) காலை 07.00 pm மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17772 குடும்பங்களை சேர்ந்த 59071 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
75 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 6615 குடும்பங்களை சேர்ந்த 19260 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 521 குடும்பங்களை சேர்ந்த 1844 நபர்களும், தம்பலகாமம் 450 குடும்பங்களை சேர்ந்த 1421 நபர்களும்,மொறவெவ 135 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும்,சேருவில 1094 குடும்பங்களை சேர்ந்த 3353 நபர்களும், வெருகல் 1880 குடும்பங்களை சேர்ந்த 5607 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா 5007 குடும்பங்களை சேர்ந்த 16446 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாகவும் மகாவலி ஆற்றுப்பெருக்கெடுப்பு காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ரொஷான்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |