அரசாங்கத்தை எள்ளி நகையாடும் மக்கள் - வெளிவந்த கடும் விமர்சனம்
நாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மிகவும் பரிதாபகரமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக 43 ஆவது பிரிவின் தலைவர் கரு பரணவிதான(Karu Paranavithana) கொழும்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம், மக்கள் நலன், ஜனநாயகம் என அனைத்து அம்சங்களிலும் அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாக மாறியுள்ளதாக பரணவிதான தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் 43 ஆவது பிரிவு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கையில் எந்த அரசாங்கமும் மூன்று வருடங்களுக்கும் குறைவாக இந்த நிலைமையில் இருக்கவில்லை. அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகளின் கௌரவம் இன்று இல்லாமல் போய்விட்டது. மக்கள் அவர்களை மதிப்பதில்லை. மக்கள் சிரிக்கிறார்கள். ஹூ சத்தம் போடுகின்றனர்.
நாட்டின் தலைவரின் பேச்சுக்கு மக்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர். அரச தலைவர் முதல் அரசாங்கத்தில் எவரும் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை.
இந்த தோல்வியாலும், கண்ணியம் இழந்ததாலும் இன்று ஆளுங்கட்சி வெறித்தனமாக செயல்படுகிறது மக்கள் மனதில் அரசு பற்றிய எந்த அபிப்பிராயமும் இப்போது இல்லை.
இதன் விளைவாக, அவர்களின் விமர்சகர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் மீது தொடர்ச்சியான கீழ்த்தரமான, கேவலமான, தாக்குதல்கள் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார்.
