எழுந்துள்ள புதிய சர்ச்சை! ஊடகத்துறை அமைச்சர் மன்னிப்புக்கோர வேண்டும்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களை 'மிகவும் மோசமானவர்கள்' என்று வர்ணித்தமையானது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமரியாதை செயல் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர் நியமனங்களில் நியாயத்துவத்தைப் பேணாமல், கல்விக்கட்டமைப்பு மிகமோசமான பாதையில் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தற்போது ஆசிரியர்களைத் தூற்றுகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடரந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அவருடைய கருத்துத் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளியிடும் அதேவேளை, நாட்டின் ஆசிரியர் சமூகத்திடம் அவர் மன்னிப்புக்கோரவேண்டும்.
நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வியைப் பெற்றுக்கொடுப்பதை இலக்காகக்கொண்டு, அதற்கு செயல்வடிவம் கொடுத்த சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் வழிவந்தவர்கள் என்ற அடிப்படையில், கல்வித்துறையின் போக்கு பெரிதும் கவலையளிக்கின்றது.
கல்விக்கட்டமைப்புடன் அரசியல் அபிலாஷைகள் கூட்டிணையும்போது, அக்கட்டமைப்பு முழுவதுமாகப் பாதிப்படையும். நாட்டின் பல்வேறு துறைகளிலும் அரசியல் ரீதியான தலையீடுகளும் தனிப்பட்ட அரசியல்நலன் நோக்கங்களும் காணப்படுகின்ற போதிலும், கல்வித்துறையில் அதனை அனுமதிக்கமுடியாது.
அதேவேளை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களை 'மிகவும் மோசமானவர்கள்' என்று வர்ணித்தமையானது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமரியாதையாகும். அவருடைய அந்தக் கருத்துத் தொடர்பில் நாம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.