ஊடகங்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள மருத்துவ நிபுணர்
தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்காவின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் எதிர்ப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தான் தெரிவித்த முழுக் கருத்தையும் வெளியிடாமல், ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்து, அதனைத் தலையங்கமாக வெளியிடும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் அறிந்திருக்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் நிலை மற்றும் அதனால் பாடசாலைக் கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பிலான இணையவழிக் கலந்துரையாடல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை பேராசிரியர் நீலிகா மலவிகே கலந்துகொண்டிருந்தார். இதன்போது இனிமேலும் பாடசாலைகளை மூடிவைத்திருப்பது நடைமுறைக்குப் பொருத்தமற்ற விடயம் எனவும், அதன் காரணமாக இயலுமானவரை விரைவில் பாடசாலைகளை மீளத் திறக்கவேண்டுமென அவர் கூறியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அவர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் பேராசிரியர் நீலிகா மலவிகே அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
பாடசாலைகளை மீளத்திறக்க வேண்டுமென தான் கூறவில்லை எனவும், தற்போது நாடு முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இப்போதுதான் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை ஓரளவிற்குக் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறிருக்கையில் தான் கலந்துகொண்ட 40 நிமிட இணையவழிக் கலந்துரையாடலில் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்து, அதனைத் தலையங்கமாக வெளியிடும் பட்சத்தில் அதனால் எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதை ஊடகங்கள் அறியவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா ஊடகங்களின் இத்தகைய செயற்பாடுகளினால் பெரிதும் கவலையும், களைப்பும் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட வேண்டுமெனவும், ஊடகங்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றன எனவும், இதற்கு ஒரு முடிவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு சந்தேகம் இருப்பவர்கள், இணையவழிக் கலந்துரையாடலின்போது உண்மையிலேயே தான் என்ன கூறினேன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், யூடியூப் ஊடாக அக்காணொளியைப் பார்வையிடமுடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களினால் வெளியிடப்பட்ட செய்திகளை நம்பி, அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் தன்னைத் தாக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை இட்டவர்களுக்கு கூறுவதற்கு தன்னிடம் எதுவுமில்லை எனவும், பேராசிரியர் நீலிகா மலவிகே தன்னுடைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.