சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு
நாடாளுமன்றில் சுயாதீன இயக்கத்தை அறிவித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளது.
இப் பேச்சுவார்த்தையின் போது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ், நிமல் லங்சா ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித சேனாரத்ன, கலாநிதி ஹர்ச டி சில்வா, கயந்த கருணாதிலக்க ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம், நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விமல் வீரவங்ச,
"ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று எமது ஐந்து பேர் அடங்கிய குழு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளை போல் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணாத நாடாளுமன்ற அமர்வாக அடுத்த அமர்வை மாற்றாது, தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்து தரப்புடனும் பேச்சவார்த்தை நடத்தி ஒரு இணக்கத்திற்கு வரவே நாங்கள் முயற்சித்து வருகின்றோம்” எனக் கூறியுள்ளார்.
இம் முதல் கட்டப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதை தொடர்ந்து மீண்டுமோர் பேச்சுவார்த்தையை நடத்த இரண்டு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
