சிறிலங்கா அரச தலைவர் இல்லாததால் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நிலை! நாளை முக்கிய தீர்மானம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (22) நண்பகல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற கூட்டத்திலேயே பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வட்டாரங்களின்படி, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவிகிதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் முடிவு குறித்து நாளை விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனினும், யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் முடிவுக்கு 10 பங்காளிக்கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து, கட்சித் தலைவர்கள் குழு இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இது குறித்து விவாதித்துள்ளனர்.
இதேவேளை, ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க பிரதமரை சந்திக்க கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர் என கலந்துரையாடலில் பங்கேற்ற ஒரு கட்சித் தலைவர் கூறியுள்ளார்.