போர்க்குற்றங்களுக்கான விசாரணைக்கு பதிலளிக்காது சிறிலங்கா விலகிச் செல்ல முடியாது!
இலங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்ற விசாரணையானது உள்ளகப் பொறிமுறையாக அல்லாமல், கட்டாயம் வெளிநாட்டு பொறிமுறை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நோர்வோயின் நாடாளுமன்றத்திற்கு புதிததாக தேர்வுசெய்யப்பட்ட தொழிற்கட்சி நாடாளுன்ற உறுப்பினரான கம்சாயினி குணரட்னம் வலியுறுத்தியுள்ளார்.
காணொளி காட்சி ஊடாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணைக்கு தான் அழைப்பு விடுப்பேன் எனவும் அதற்கான பதிலை வழங்காமல் சிறிலங்கா விலகிச் செல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான சிறந்த தீர்வை இலங்கை பிரஜைகளே தேட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தீர்வொன்றை வழங்க வேண்டும் என வெளிநாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்கும் வரை சிறிலங்கா அரசாங்கம் காத்திருக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என நோர்வேயின் புதிய அரசாங்கத்தை தான் கோருவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை புறக்கணிப்பதே முன்னோக்கி செல்லும் வழி என்பதை தாம் நம்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார். புறக்கணிப்பு மூலம் விடயங்களை சாதிக்கலாம் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாகவே வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தமக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாட தயார் எனவும் கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார். வர்த்தகம் கல்வி உள்ளிட்ட விடயங்களில் நோர்வே அரசாங்கம் சிறிலங்காவிற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோர்வே எவ்வாறு சிறிலங்காவிற்கு உதவ முடியும் என்பது தொடர்பில் நோர்வேயின் புதிய வெளிவிவகார அமைச்சர், சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் உள்ளிட்டவர்களுடன் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.