உதய கம்மன்பில இன்று ஜோக்கர்! எதிரணி பாரிய குற்றச்சாட்டு
உதய கம்மன்பில இன்று ஜோக்கராக மாறிவிட்டார். அன்றைய இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்த போது கறுப்புக்கொடி ஏற்றினார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவதுவல (J.C.Alawathuwala) தெரிவித்துள்ளார்.
வீடற்றவர்களுக்கு உதவி செய்யவே அவர் இந்த நாட்டிற்கு வந்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அன்று கறுப்புக் கொடி தூக்கியவர்கள் இன்று இந்தியாவில் இருந்து வரும் எண்ணெய் கப்பலை வரவேற்க வெட்கமின்றி நிகழ்வை நடத்திச் செல்கிறார்கள்.
இப்போது கம்மன்பில சொல்வதை நாட்டு மக்கள் நம்புவதில்லை. ஒரே நாடு ஒரு சட்டம் என்று பேசி ஆட்சிக்கு வந்த நிலையில் இன்று பாதாள உலகம் தலை தூக்குகின்றது. நேற்று களுத்துறையில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாட்டில் சட்டம் இல்லை என்பதை இந்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீளப் பெறப்பட்டால், ஏன் மீண்டும் கையொப்பமிட முடியாது?
இன்று நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையால் மக்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர், பாதாள உலகம் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதனாலேயே T56 என்ற யுகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
