சுகாதாரத் துறை உறுப்பினர்களுக்கான 35,000 கொடுப்பனவு: விடுக்கப்பட்ட கோரிக்கை
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு 72 சுகாதாரத் துறை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிதி அமைச்சின் செயலாளருடன் நடத்திய கலந்துரையாடல் இன்று (06) பிற்பகல் நிறைவடைந்துள்ளது.
அதன்போதே குறித்த உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நிலையான பதில்
அத்தோடு, சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் வாரத்தில் நிலையான பதில் வழங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம்
இந்த நிலைமையை கருத்திற்கொண்ட சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாளை (07) முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க தீர்மானித்ததாக அதன் அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தக் குழுவின் தீர்மானத்தை மிக உன்னிப்பாக அவதானிப்பதாகவும் தீர்வுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |