கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் காணி விடுவிப்பு : ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்பதுடன், அக்கிராம மக்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்திய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் தெரிவித்த ரவிகரன்
அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றக்கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்படை இணக்கம்
முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்பு காணிகள், தோட்டக்காணிகள், வயற்காணிகள், குளங்கள், கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி, முள்ளிக்குளத்தில் ஒருபகுதி காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார்.
கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறு மன்னாருக்கு வருகை தரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்