சிறிலங்காவில் தொடரும் அரசியல் வேட்டை!! பகிரங்கப்படுத்திய மனுஷ நாணயக்கார
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்கள் வேட்டையாடப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு நேரடியான பங்களிப்பை வழங்கும் சந்தர்ப்பத்தை தடுக்க எந்த காரணங்களையும் கூறாது குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம்சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சிறப்புரிமை தொடர்பான கேள்வியெழுப்பும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி தடயவில் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணை சம்பந்தமான தகவல்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக் கூடத்தின் பொறுப்பதிகாரியை சந்திப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையம் ஊடாக எனக்கு அழைப்பு கிடைத்தது.
யார் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக? எந்த காரணத்திற்காக? விசாரணைக்கான தகவல்களை என்னிடம் பெற எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
எவ்வித காரணங்களும் கூறாது குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்தமை சிவில் பிரஜை என்ற வகையில் எனது உரிமைகளை மீறும் நடவடிக்கை.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது சிறப்புரிமையை மீறும் செயலாகவே கருதுகின்றேன்.
மேலும் இந்த விதமாக எவ்வித காரணமும் அறிவிக்காது குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளமையானத நாட்டில் அமுலில் இருக்கும் பொதுச் சட்டத்தை மீறிச் செல்லும் செயற்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.