அச்சுறுத்தும் சுன்னாகம் காவல்துறை : அச்சத்துடன் சாட்சியமளிப்போர்
யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கடந்த 10ஆம் திகதி காவல்துறையினரால் உதைத்து வீழ்த்தி உயிரிழந்ததாக கூறப்படும் விபத்து சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு சுன்னாகம் காவல்துறையினர் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் என்பவர் கடந்த 10 ஆம் திகதி காவல்துறையினரால் வழிமறித்து அவர் நிற்காத நிலையில், துரத்திச் சென்ற காவல்துறையினர் அவரது மோட்டார் சைக்கிளை காலால் உதைத்ததில் அவர் வீதியில் வீழ்ந்து தலையில் பலத்த காயத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் வயாவிளான் பகுதியில் இடம்பெற்றது.
தனது காணியில் வேலைசெய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மின்சார சபை ஊழியரை வயாவிளான் பகுதியில் இரண்டு காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். மின்சார சபை ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் அவ்விடத்தில் நில்லாது உரும்பிராய் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
காலால் உதைந்து
இதன்போது தாம் மறித்து நிற்கவில்லை என கருதிய காவல்துறையினர் இருவர் அவரை பின்னால் துரத்தி சென்றுள்ளனர். வேகமாக துரத்திச் சென்ற அவர்கள் உரும்பிராய் சந்திக்கு அருகில் இருக்கின்ற ஆயக்கடவை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் காலால் உதைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளுக்கு காலால் உதைந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மின்சார சபை ஊழியர் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுக்குள்ளானார். இதனை வீதியால் பயணித்த பொதுமக்கள் சிலர் நேரில் கண்டு ஆத்திரம் அடைந்து காவல்துறையிடம் நீதி கேட்டு தாக்க முற்பட்டுள்ளனர்.
எந்தவித முயற்சியும் செய்யாத காவல்துறை
எனினும் காயமடைந்தவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் எந்தவித முயற்சியும் செய்யாத நிலையில் வீதியிலுள்ள பொதுமக்கள் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் அதற்கு அனுமதிக்காத காவல்துறையினர் நோயாளர் காவு வண்டி வரும் வரை எவரும் அருகில் செல்ல வேண்டாம் எனக் கூறி 15 நிமிடங்களுக்கு மேலாக அவரை நெருங்கவிடாது தடுத்துள்ளனர்.
இறுதியில் காவல்துறையினருடன் முரண்பட்ட இளைஞர்கள், முச்சக்கர வண்டி ஒன்றில் காயமடைந்தவரை ஏற்றி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இருப்பினும் அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வழிமறித்த இரண்டு காவல்துறையினரும் நிறைபோதையில் அவ்விடத்தில் நின்றதாகவும் அப்பகுதியில் பயணித்த பொதுமக்கள் அன்றிரவு ஊடகவியலாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு காவல்துறையினரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும் அவர்கள் மதுபானம் எதனையும் பாவிக்கவில்லை என சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணால் கண்ட சாட்சியங்கள் நீதிமன்றத்தில்
இந்நிலையில் காவல்துறையினர்தான் மின்சார சபை ஊழியரை தூரத்திச் சென்று காலால் உதைந்து அவரை விபத்துக்குள்ளாக்கினார்கள் என்பதை கண்ணால் கண்ட சாட்சியங்கள் தாம் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி வரும் நிலையிலேயே சுன்னாகம் காவல்துறையினர் தற்போது அப்பகுதிக்குச் சென்று இந்த சம்பவம் தொடர்பில் யார் யார் பார்த்தார்கள் இது தொடர்பில் யார் சாட்சியம் சொல்லப் போகிறார்கள் போன்ற விடயங்களை திரட்டி குறித்த நபர்களை தொலைபேசி ஊடாகவும் நேரில் சென்றும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதிப்போக்குவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுபவர்களை போல் அல்லாது போதையை பாவித்து விட்டு அவ்விடத்திலிருந்து மின்சார சபை ஊழியரை வழி மறித்து துரத்திச் சென்று அவரை காலால் உதைந்து மரணத்தை ஏற்படுத்தியதாகவும் நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் எனவே இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுப்பதற்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |