யாழில் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டோர் : அம்பலமான தகவல்
1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக சந்திரிக்கா (Chandrika Kumaratunga) இருந்த போது யாழில் 600ற்கு மேற்பட்ட எங்களுடைய சகோதரர்கள் இராணவத்தினரால் கைது செய்யப்பட்டதாக அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் உதவிச் செயலாளராக இருந்த த. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா தலைமையிலான கூட்டரசாங்கம் யாழ்ப்பாண குடாநாட்டை வெண்டாமரை இயக்கத்தின் ஊடாக கைப்பற்றி இங்கே அமைதியை ஏற்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையில் நிலைகொண்டிருந்நது.
யாழ்ப்பாணத்தில் இந்தக் காலப்பகுதியில் கிட்டத்தட்ட 600ற்கு மேற்பட்ட எங்களுடைய சகோதரர்கள் இராணவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இந்தக் காலப்பகுதியில் எனது சகோதரரும் கைது செய்யப்பட்டார்.
எங்களுடைய உறவினர்களை கண்டுபிடிப்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தை ஆரம்பித்தோம்.
அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி நிலைகொண்டிருந்த போது எங்களுடைய பிள்ளைகளை தேடுவதற்காக அங்கே சென்ற வேளை எங்களுக்கு ஜனாதிபதி சந்திரிக்காவை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
1997ஆம் ஆண்டு மார்கழி மாதம் 27ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவை அலரி மாளிகையில் சந்தித்தோம். காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் கேட்ட போது இது தொடர்பாக ஆராய்ந்து 6 மாதங்களிலே முடிவு சொல்வதாக பதிலளித்தார்.
அதன்பின்னர் 1999ஆம் ஆண்டு பலாலிலியில் செய்மதித் தொடர்பு மூலமாக நடைபெற்ற மாநாட்டிலே எங்களுடைய பிள்ளைகள் குறித்து உண்மையை சொல்லுமாறு கேட்டோம். இன்று 30 வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி கிடைக்கவில்லை.” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
