இடிந்து விழுந்த மந்திரிமனை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரிமனையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) வலியுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் (17) இடிந்து விழுந்த மந்திரிமனையை நேற்று (18) மாலை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடி, சின்னத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை முன்னெடுப்பதாகவும் பிமல் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
தொல்லியல் திணைக்களம்
யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து வீழ்ந்து பகுதியளவில் சேதம் அடைந்துள்ள நிலையில் இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ, தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடியுள்ளார்
இதேவேளை வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) நேற்று (18) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
