துறைமுகத்தில் முடங்கியுள்ள உணவு கொள்கலன்கள்! முடிவுக்கு காத்திருக்கும் இறக்குமதியாளர்கள்
இலங்கை எதிர்நோக்கி இருக்கும் டொலர் பற்றாக்குறை காரணமாக கொழும்பு துறைமுகத்திற்குள் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கி 800க்கும் மேற்பட்ட கொள்கலன் பெட்டிகளை விடுவிக்க 15 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்கலன்களை விடுத்து கொள்ள முடியாதுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் தேவையான டொலர் தொகை அடங்கிய பட்டியலை தயாரித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கியுள்ளதாகவும் அடுத்த சில தினங்களில் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
உணவு இறக்குமதியாளர்கள் என்ற வகையில் தாம் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தனியான இறக்குமதியாளர்கள் தனிப்பட்ட ரீதியில் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இறங்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.