அறிவிப்பை மீளப்பெற்றுக் கொண்டார் வர்த்தகத்துறை அமைச்சர்
சதொச விற்பனை மையங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற விடயம் இன்று தொடக்கம் நீக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 4 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் மேலதிகமாக 5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
அரிசி, சீனி, மஞ்சள் போன்ற பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றுடன் மேலும் 5 பொருட்களையேனும் கொள்வனவு செய்யாவிட்டால், அரிசி மற்றும் சீனியை மாத்திரம் விற்பனை செய்யும் கொள்கை பின்பற்றப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, இன்று முதல் குறித்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.