செம்மணி விஜயம் குறித்த அநுர மீதான குற்றச்சாட்டு: கண்டித்த அரச தரப்பு
செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekhar) நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் பரந்தன்-கரச்சி-முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் வாவிக்கு அருகில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (02) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ வடக்கிலுள்ள புதைகுழிகளை மூடி மறைப்பதற்காகவே யாழ்ப்பாணத்துக்கு வந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கின்றார் என சில தமிழ் அரசியல் வாதிகள் பாவித்தனமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
செம்மணி புதைகுழியை தோண்டுவதற்கு நிதி ஒதுக்கியது யார் ? ஸ்கேன் இயந்திரம் கொண்டுவந்தது யார் ? புதைகுழியை பாதுகாப்பதற்கு இரவுநேரங்களில் காவலாளிகளை போட்டிருப்பது யார் ? இவற்றையெல்லாம் எமது அரசாங்கமே செய்கின்றது.
இது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்.
உறுதிமொழி
இது தொடர்பான உறுதிமொழியைக்கூட எமது ஜனாதிபதியே வழங்கியுள்ளார்.
இனிமேலும் தமிழ் மக்களுக்கு இப்படியான அரசியல்வாதிகளால் தண்ணி காட்ட முடியாது.
தமிழ் மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர் இதனால்தான் கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் குப்பைகள் எல்லாம் கூட்டு சேர்ந்தன, துரோகிககள் என விமர்சிக்கப்பட்டவர்களுடன்கூட கூட்டு சேர்ந்தனர்.
எதிராக மக்கள்
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரு வருடமாகின்றது, பொருளாதார சவால்கள் உள்ளன.
அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டால்தான் அபிவிருத்திகளை முன்னெடுக்ககூடியதாக இருக்கும், பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி வருகின்றோம்.
எமக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்துகள் விதைக்கப்படலாம் ஆனால் உண்மை என்னவென்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள், எங்களுக்கான ஆதரவை மென்மேலும் வெளிப்படுத்துவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
